திங்கள், 30 ஜூன், 2008

தமிழ்த் தின கவியரங்கு யாழ் இந்துக் கல்லூரி

யாழ் இந்துக் கல்லூரிதமிழ்ச் சங்கம் நடாத்தியதமிழ்த் தின கவியரங்கு 1997

திறந்த ஒரு மனதுடனே செய்யவொரு கவியரங்கில்

இறங்கி நாம் நிற்பதுவே இப்புவியில் - கரங்குவித்து

இரந்துன்னைக் கேட்கின்றோம் எழில் முருகா

நல்லூரா விரைந்தெமைக் காப்பாய் விழைந்து!

சாப்பாட்டு நேரங்கள் தாண்டிடினும் இங்குநின்று

கூப்பாடு போடாமல் கொடுப்பீரே உற்சாகம்


நேரம் பிந்திப் போய்விட்டால் நேர்ந்த கதையும் என்னென்று

கூறு என்று கேட்கின்ற கூதல் எடுப்பு எனக்கும் வரும்!


தலைநிமிர கவியெழுத தன் வழியில் பழக்கிவிட்ட

இளங்கிழவர் ச வே ப இதயத்திலே போற்றுகிறேன்.


கூடியிருக்கும் அவையோரே குறும்பு செய்யும் தம்பியரே

தேடிவந்து எம் நிகழ்வை சிறப்பளிக்கும் மாணவரே

ஈடில்லா அறிவுக்கு எமைத்திருப்பும் ஆசிரியர், மற்றும்

தாடிக்கார தலைவருக்கும் சாற்றுகிறேன் என் வணக்கம்!


அடிக்கடி இடுப்புத் தொட்டு அவிழ்ந்ததுவோ வேட்டி என்று

துடிக்கின்ற எல்லோரும் துன்பங்களை விட்டிடுக


சொல்வதெல்லாம் உண்மை, உண்மை தவிர வேறில்லை (ஆனால்) பல்லுடைக்க வேண்டும் என்று பாய்ந்து இங்கே நீங்கள் வந்து

கல்லெறிந்து குழப்புவீரேல் கால்தெறிக்க ஓடிடுவேன்-அதில்

வெல்லமுடியாதென்னை, வேறுவழி பார்த்திடுங்கள்.


எடுத்த பருவம் ஏழு, இடையில் எனது நாலு

தொடுத்த காலம் சோழர் தொடங்கும் இனியென் பாடல்.


காலத்தை வென்றவள் நீ

ஞாலத் தமிழினிலே நன்னெறியே கைக்கொண்டு

காலும் ஒளியிற்கு கண் திறப்போம் -சோழர் குல

மடந்தைப் பருவத்து மைவிழியே உன்மனதில்

இடத்தை தருவாய் இனி!


கங்கையும் கடாரமும் கொண்ட சோழர்

எங்குமே தமிழினை இயம்பச் செய்தார்

தங்குமா இடைவழி? தாவுமா கடல் வழி

மங்குமா இது எனி? மகிழுமா தமிழினி ?


பேதையே, உனக்கு இங்கு பெரும் பகுதி அறிவும் இல்லை

பெற்றுனைக் கற்க வந்தால் பேசவே புரியவில்லை

எனக்குப் புரியாத சங்கத் தமிழ் நீ !

பெதும்பையே அறம்மொழிந்து பிஞ்சிலே பழுத்துப்போனாய்
வெம்பலாய் வேக வைப்பாய் வேண்டவேண்டாம் நின்தொடர்பு
மங்கையே நீயுமுந்தன் மனதிலே என்ன நினைத்தாய்
மதிப்புத்தான் உந்தன் பக்தி இள மனதிற்கு மட்டு புத்தி!


மடந்தையே நீயுமிங்கு,காவியம் சொல்லி வைத்தாய் காதலை வாழ வைத்தாய் சீவகன் கொண்டுவந்து சிந்தனை மணிகள் தந்தான் !ஆவியைத் தொட்டுவிட்டாய் (கவி) அரசனே கம்பனாவான் -புகழ்காவியாய் வந்து விட்டாய் காலத்தை வென்று விட்டாய்!


தமிழ் மடந்தை தருவதிங்கு,காமமா, பாணமா, காதலே உன் நாமமா?வீரமா, வேகமா, வேறுபொருள் வேண்டுமா?தாபமா, தாங்குமா? தாவும் பழி நீங்குமா?கோபமா? நாணமா? சிறு கோதையின் தாகமா?


எட்டுத் திசை கிளை பரப்பி ஏற்றமுடன் சுற்றிவந்து

சுட்டுகின்ற விரலசைக்க சுழன்றிடுமோ இவ்வுலகம்?

பட்டன்ன சிற்றிடையே, பவளவாயின்

கனியமுதேஎட்டியடி வைத்திடாது என்னருகே வந்திடடி!

காவியத்தின் கற்கண்டே காதல் வளர் காரிகையே
நோயேதும் இல்லாது பத்து நூற்றாண்டு வாழ்ந்ததென்ன
ஓவியமாய் அலங்கரித்த உன்னுடலைப் பார்த்தபின்பு
வீதியிலே செல்கையிலும் உன் விம்பந்தானே தெரியுதடி!

காளிக்கு விருந்திட்டு கடவுளென வணங்கிவிட்டு
கூளிகள் அளிக்கின்ற மச்சக் கூழ் கூட இனிமையடி!
பாவிகளை வென்றவரை பரணியிலே பாடிவைத்த
தாழ்வில்லாத சயங்கொண்டார் உன் தந்தையென்று சொல்லிடவா?


அடிக்கவந்தார் கம்பரிங்கு உன் அப்பனெனச் சொல்லிக்கொண்டு
துடித்துப்போனேன் நானுமங்கு உன் தூய்மை என்ன கொஞ்சமென்று
அடித்துச்சொல்லு நீயுமிங்கு உன் அப்பன் என்ன பத்துப்பேரா?
மடித்துக் கட்டி வேட்டியோடு மறைவில் வைத்துச் சாத்திடுவேன்!

ஒட்டக்கூத்தன் ஒரு அப்பன் புகழேந்தி உன்னண்ணன்
கட்டில்லாது புராணம் பாடும் கச்சியப்பன் கடைவி மச்சான்
திட்டமிட்டுக் காமத்தோடு சீவகனைப் பாடி வைத்த
பட்டம் பெற்ற திருத்தக்கன் பால் பருக்கும் சேவகனா??

சேக்கிழார் உன்னம்மா செவிலித்தாய் நம்பியாண்டார்
ஊக்கமாய் சொல்லிவைத்த உண்மைகள் சித்தாந்தமாக
தேக்கமாய்த் தந்த பலரும் சேர்ந்தனர் உறவுஆகி
ஈக்களாய் மொய்த்து எனக்கு இடைஞ்சலாய் வந்துசேர்ந்தார்.

சேலைகட்டும் குமரியோடு சேர்ந்தொளிரும் அழகுகாண
வேலையற்ற கம்பன் உன்னை வேகத்தோடு வளர்த்து விட்டான்
ஆளைக்கொல்லும் அற்புதமே அழகுசொட்டும் விக்கிரமேதாழைநிறச் சிவப்பணிந்து தாவிவரும் சீதையடி!

இலங்கையிலே பிறந்தவன் நான் இ.ராவணனாய் எண்ணாதே
புலம்பெயர்ந்து போய்விடினும் புறங்காணா நின்நினைவு
இலங்கிடுமே என்மனதில் எழுச்சியுடன், உனைப்பிடித்து
விலங்கிடுவோர் கூட்டமதை வேட்டுக்கிரையாக்கிடவா?

இலக்குவனாய்த் தம்பிவேண்டும் இணைபிரியா அனுமன் வேண்டும்
குலக்கொடியே நீயும்வந்து கூறவேண்டும் உன் சம்மதத்தை
துலக்கமாக அன்புகொண்டு தூங்க வேண்டும் என்னருகே
இலக்கியமே உந்தனுக்கு இலக்கணமாய் நானனமைவேன்

பெண்பின்னால் திரியுமொரு பித்தனெனப் பேசமுன்பு
உன் மொழியால் சுகம் தருவாய் உண்மைகளைச் சொல்லிடுவாய்
அன்பரசி தமிழணங்கே ஆற்றலிங்கு தருபவளே
கண்களிலே என்றுமுந்தன் காட்சியினை நிலைக்கவிடு!

கம்பனிங்கு கவிதைதந்தான் (மகன் தன்) காதலுக்காய் உயிரும் தந்தான்
இன்பரசக் காவியங்கள் இருவிழிநீர் ஓவியங்கள்
காதலுக்குச் சக்தியுண்டு கால்தினை வெல்வதற்கு
ஆதலினால் பெண்ணரங்கே அஞ்சவேண்டாம் நானுனக்கே

ஏழ்மரத்தை தொளையெடுக்க என் கரத்தில் அம்பு இல்லை –ஆனால்
கூழ் கொடுத்துக் காப்பாற்றக் கூடுமெநதன் கைகளினால்
தாழ்ந்திடவே நானும்விடேன் தாரகையே வானைவிட்டு
கீழ்த் தரையில் வந்துஇங்கு கீதமழை பொழிந்துவிடு!

ஈழப் பெருஞ்சுடர் நீ
என்மனம் ஏற்றவள் நீ
சோழன் வளர்த்தவள் நீ
சொல்லின் பெருந்தகை நீ
வாழ வகுத்தவள் நீ
வார்த்தையின் வாழ்வுகள் நீ
காலும் ஒளிச் சுடர் நீ
காலத்தை வென்றவள் நீ

தூவும் மலர்களில் நீ
தூக்கும் கரத்தினில் நீ
தாவும் நதியிலும் நீ
தாகம் தணிப்பவள் நீ
மாவும் அரைத்திடு நீ
மாத்திரை கொடுத்திடு நீ
காவும் சிவிகையில் நீ
காலத்தை வென்றவள்


என்றுமே மனதினிலே நீ
இரவிலே கனவிலே நீ
குன்றெனும் பெருமையில் நீ
குறைவிலா அறிவுமே நீ
விண்ணெழும் மதியிலும் நீ
வேகத்தின் பதிவிலும் நீ
கன்றொன்றின் பசுவும் நீ
காலத்தை வென்றவள் நீ!!!


வணக்கம்.