ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

உள்ளானே இல்லானே

வாணிவிழா கொழும்பு மருத்துவ பீடம்
கவியரங்கு 2009


அவல் வாங்கிப் பொரிவாங்கி அதனோடு தமிழ் வாங்கி
கவலைகள் இல்லாத கணபதியே- அடிவாங்கி
செத்து மடியுமுடல் சிறிதளவும் கண்பாராய்
விக்கினேசா யாரின் வினை?

மணிக்கோபுரம் மிகுந்து மதில் சூழ்ந்த நல்லூரில்
பணிக்காக வந்தமரும் பைந்தமிழே- தனிக்காவல்
நின்றான் மறைந்தானா? நின்னடியைச் சேர்ந்தானா?
கனிவாய் விடையினைக் காட்டு!!

எனது கைப்பிடித்து எதுகை படிப்பித்து
கவனம் மோனையெனக் கட்டுரைத்து- இணுவிலை
ஆளுகின்ற ச வே ப ஆழமிகு தமிழ்க் கடலே உன்
காலில் எந்தன் கலை!!!


வெற்றியினைப்பாடும் விஜயதசமி நன்னாளில்
கொற்றவைத் தேவியைக் கும்பிட்டு -மற்றவை
ஆள்வினை மாறி அடிமையாய் வாழ்கின்ற எம்
தோல்வியைப் பாடுவேன் தொடங்கி!!!


குண்டு விழுந்தாலும் குடும்பம் குலைந்தாலும்
பெண்டு கைவிட்டுப் போனாலும் - நின்றாடும்
உறுதி கலங்காமல் உயிர்வாழும் எங்களது
பெறுதியே வாழ்வின் பேறு!!!

வெறியிலை வந்தாலும் விழுத்தாமல் கொழும்புக்கு
சரியாகச் சேர்க்கும் மோட்ட சைக்கிளுக்கும் - சரிபாதி
உரிமை இருக்கு என்சுகத்தில் பங்கெடுக்க இந்த
வரிகள் அதற்கு வாழ்த்து!!


இல்லானே உள்ளானே எழுந்து பதில் சொல்லானே
நல்லானே வல்லானே நடுநடுங்க வைத்தானே ( அசையாக்)
கல்லானே கழறானே களிறுகளை வைத்திருந்தும் (போரை)
வெல்லானே வல்லை வெளியானே வரலாறு எழுதிவைத்துச்
செல்லானே இனிச் செல்லானே ஆனால்
செய்தவற்றை மறவோமே!!

நல்லாய் இருக்கேக்கை நாலுபேரும் வாழ்த்துரைக்கும்
பொல்லாத ஊரு இது- புகழ் மழுங்கிப்போய்விட்டால்
எல்லாரும் எள்ளாரோ? இவ்வுலக நியதியிது எனவே
நல்லாய் இருக்க நாள் முழுதும் பாடுபடு!!

நேற்றுப் புகழ்பாடி நீ இறைவன் எனத்தினமும்
போற்றி வந்தவரும் போனார்கள்- வாட்டுதடா
நல்லன் என்ச் சொன்ன நாவாலே இன்று உனைக்
கள்ளன் என்போர் கதை!!!


கடவுள் சிலை புரட்டிக் காலடியில் வைத்திருக்கும்
தகடுகளை களவெடுத்தால் சரியாமோ? - சிலை சரிந்தால்
கோயிலை இழுத்துப் பூட்டுக் கொழுவுவதோ? இதுதான் உன்
சேய்களின் மனத்துச் சினம்!

தலையே போய்விட்டால் தாமாகச் சுழன்றாடும்
வாலுகளை நினைக்கேக்கை வாந்திவரும்- பலகாலம்
இதுகள் நடக்காமல் இறைவா நீ காப்பாற்று
கதியே பார்வதியின் கரம்.

இறைவன் இப்போது எம்குறையைக் கேட்காமல்
சுடலைக்குக் கூத்தடச் சென்றிட்டான் - பதியோடு
பாதி உடம்பெடுத்த பத்தினியே பார்வதியே எம்குறைக்கு
காதைக் கொடுத்துக் களை!!!


இல்லானைப் பாடுதல்

இல்லானை இல்லாளும் எடுத்தெறிவாள் எனச் சொன்ன
பொல்லாத் தமிழுண்மை பொறுத்தருளி- இதயத்தில்
கள்ளம் இல்லாத காரிகையைக் காட்டியருள் (காதல்)
வெள்ளம் கரைபுரளும் வேளை!!

அறிவில்லான் அழகில்லான் ஆனாலும் ஆளுமையில்
முறிவில்லான் முறையில்லான் முழுதாகச் சொன்னால் மனக்
கறையில்லான் வெறுங் கதையில்லான் இதயம்
தெறிவில்லாய் மாறியதைத் தேர்!!!


உள்ளானைப் பாடுதல்

உள்ளான் தெரியாமல் உடுத்திருக்கும் பெண்களைப்போல்
உள்ளான் அவன் உள்ளான் - உருச்சிறுத்த
நுள்ளான் உள் நுழைந்து பார்க்கும்வரை வெளிச்
செல்லான் என்பதே சரி!!

உள்ளானை எப்படி மோதகத்தின் உள்வைத்தார்?
உள்ளான் பயற்றோடு சர்க்கரை சேர் உள்ளான்
உள்ளான் இனிக்கும் உன் நாவில் நீர் பனிக்கும் இது
உள்ளான் சுவைகண்டோர்உரை!!!


இது போன மாசம் நடந்த கதை

தன் காதலிக்கு கொடுக்க
பெறுமதியான கவிதை ஒன்றை இரவல் கேட்டான் என் நண்பன்
எழுதிக் கொடுத்தேன்

இளநி விலை இருபது எண்டா
இவளின் விலை நாற்பது

என்று

காதல் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை
கல்லடி கிடைக்காட்டா போதுமென்றான்

நான் சொன்னேன்

வாங்கிக் கட்ட பயந்தவர்கள் காதலிக்காதீர்கள்

சீதனம்
வாங்கிக் கட்ட உள்ளவர்களும் காதலிக்காதீர்கள்

கன்னித் தமிழில் நான் கைவைத்தால் மனம் பொருமும்
தணிக்கை வாசகர்களுக்காய் ( இங்கிலிஸ்)
கலப்புத் தமிழில் என் கவிதை!!!

காதல் என்பது
receptor இல் bind பண்ணும் ligand அல்ல
அது
receptor தூண்டிவரும் effect!!!



Braxton Hick வரும்போது பொறுமைகாத்து
Active labour ஐ attend பண்ணினால்
காதல் சுகமாய் பிரசவிக்கும்

வலிக்குப் பயந்தவர்கள் சீசர் என்ற பெயரில்
வயிற்றைக் கிழிக்கிறார்கள்!!!


ஆலிலை அவளது வயிறு
அதனுள் முளைப்பது நவதானியப் பயிரு

கால்களோ காதலின் தூண்கள் -வீங்கும்
காலத்தில் வலிதான் போங்கள்

இனிப்பவள் என்னவள் SWEETY
இடைசொல்லும் அவளது Beauty
கனியிதழ் கண்டதும் ஊறும்
கற்பனை இல்லையே பாரும்




ஆடும் பி்னனல் தொட்டுச் செல்லும்
அவளின் அழகு கண்டு
ஆவல் கொண்டு ஆடும் மனம்
அதனின் சுவையோ நன்று

தேடும் கண்கள் தோற்றுப் பின்னர்
தொலைவு தூரம் என்று
தேம்பியழும் என்றபோதும் துள்ளித்
திரும்பும் பசுக் கன்று!!!

உக்கல் வேலிப் பொட்டுக்காலே
உருகி மனது ஓடும்
உறுக்கி நெருக்கி பயப்படுத்தி
உதைக்க வேணும் பாரும்

தப்பு தப்பு என்றபோதும்
தனிமை சுகங்கள் கூறும்
தந்தனத்தோம் தாளத்தோடு
ததும்பி மனம் பாடும்

உள்ளான் இல்லான் என்று சொல்லி
ஒதுக்கி வைத்தல் தவறு- என்றும்
உள்ளான் உன்னான் என்று மனதில்
உறுதி கொள்ளப் பழகு
வல்லான் இறைவன் வாழ்த்துச் சொல்லி
வணங்கும் பக்தா உனது
எல்லா விருப்பும் எளிதில் முடியும்
இதயம் மகிழும் இனிது

வ ண க் க ம்