கோடை இடியெனவே குண்டில் ஒலிகேட்கும் கந்தக
வாடைக்காற்றடிக்க வளர்ந்த எந்தனது
பாட்டைத் தொடங்கமுன்பு பாதம் பணிவேனே,
நாட்டைக் காப்பவளே நாவரசி துணையிருப்பாய்!
தலைநிமிரக் கவியெழுத தன் வழியில் பழக்கிவிட்ட
இளங்கிழவர் ச வே ப இதயத்திலே போற்றுகிறேன்
கூடியுள்ள அவையோரே கொலு அமைத்துத் தலைமையையும்
பாடவந்திருக்கும் பாவலர்காள்! என் வணக்கம்!
கற்பகவல்லி உன் கருணைத்திறம் நயந்த
விற்பனர்கள் விளம்பிளதை விரும்பியதைக் கேட்டறிந்த
சொற்சுவை தோய தமிழ்ச் சொல் எடுத்து பாவடிப்பேன்
நற்கதி அருள்வாய் அம்மா!!
கள்ளமில்லாத கறையேதும் கொள்ளாத
வெள்ளை மனம் விரும்பும் வித்தகியே - என்மனமோ
வெள்ளம் நின்றழுகி விளைந்த பெரும் சேறு!
நல்ல தாமரையை நட்டு வைக்க வாராயோ!
பூத்தால் புன்சிரிப்பு பூவாசம் மல்லிகையாம்
ஆத்தாள் நீயெங்கள் அகம் பூக்க வரவேண்டும்
காத்தோம் நாமதற்கு கவலை நோய் தணித்த
ஊக்கந் தரவேண்டும் உன்னுதவி வேண்டுமடி!
ஒன்பது இரவுகளில் உன்னருளாம்! வேண்டுகின்ற
நிம்மதி எங்கையம்மா? நீள்விழியே நாமெல்லாம்
கண்ணது உறக்கமின்றிக் Chunningham த்தில் தொடங்கி - இன்று
வண்ணமாய் Kumar & Clark இல் வளைகின்றோம்! வரம் கொடுப்பாய்!
பேய்க்கதை கேட்டால் சிறுவன் பேதியாம் - எமக்கோ
வேர்க்குது Community Visits ஆம் கோட்டே போய்ப்
பார்த்ததென்ன பழசு! எம் அகதி வாழ்வை
மீட்டது போல் நினைவு நெஞ்சிலே நிறைந்து கொள்ளும்.
ஓடினோம் தாயே அன்று உணவின் மணமும் இன்றி!
வாடினோம் பனையின் கீழே! குடையில் வழிந்ததால் நாவை நனைத்தோம்!
ஓடியும் என்ன மனதில் உறுதியே வளரும் ! நாங்கள்
பேடிகள் அல்ல! கல்வி பெறுவதில் வெற்றி கண்டோம்!
ஆயினும் கொழும்பு வாழ்க்கை அகதியை விடவும் மோசம்
பாய்கிற எலிகள் மோதிப் பூனை பத்தடி தள்ளி வீழும்!
ஓய்விலா உலைச்சல் ஓட்டத்தில் அலைச்சல் என்று
மாய்கிற வாழ்வு வேண்டாம்! மனதிலே இன்பம்தாரும்!
படிப்பம் என்று இருக்க மனசு பாட்டிலே ஆசைகொள்ளும்!
விடுப்புகள் பேச telephone bill ந்தான் ஏறிக்கொள்ளும்
அடிக்கடி மனது மாறும் அலையும் நாய்போல் நிதமும்
புதுப்புது item கேட்கும் புத்தியும் கெட்டுப்போகும்!
பார்க்கும் பெண்ணை தாயென்று பாடியவன் இப்போது
பார்ப்பவளைத் தாயாகப் பார்க்கின்றான் - ஊத்தை மனம்!
ஈர்ப்பவளை என்ன செய்ய? இடைநடுவில் ஏற்பட்ட
ஊர்க்குணத்தால் தப்பித்து உண்மைவழி கண்டறிந்தேன்!
ஏதோ Testosterone இடைநடுவில் சதிசெய்து
பாழாகி இவன் பத்தி பழுதாகிப் போனதென்று
காரணஞ் சொல்லுவதால் கரைச்சல்கள் தீர்வதில்லை!
ஈரம் வர நெஞ்சில் எத்தனைநாட் பிடிக்குமடி!?
Sacrum வெந்தாலும் சிந்தனையில் கருகாமல்
போக்காட்ட முடியாமல் புதைந்திருக்கும் உண்மைகளை
ஆர்ப்பாட்டம் , எதிர்ப்பு அவையொன்றும் இல்லாத
போராட்ட மனதுக்கு ஓரு Bullet Proof வேண்டுமடி!
அய்யா சீனியராம்! ஆரறிவார்? - பாஸ்பண்ணி
மெய்யா வெளியேறும் வேளையில்தான் சீனியராகும்
பொய்யா அறிவுதனைப் போதித்த கலைமகளே
செய்யாத பழியெல்லாம் தீர்த்துவிட அருளிடடி!
ஏணிகள் உயர்வதில்லை என்றாலும் இவ்வுலகில்
மூன்று தலைமுறையை முன்னேற்ற வேண்டாமோ?
வாணி நீ இங்கே வரவேண்டும் கல்விதர
வேணி விண்ணப்பம்! விரைந்திங்கு வந்திடடி!
கம்பஸ் வாழ்வு எந்த மட்டும் பம்பலாகப் போகும்?
இந்தக் கேள்வி வந்தபோது என்னிதயம் வாடும்!
வந்த காலம் நல்ல காலம் வந்ததெனச் சொல்லி - இனிக்
கெட்ட காலம் விட்டுப்போகும் ! கேள்வி சுகமாகும்!
2003 புரட்டாதி