செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

காணி நிலம் வேண்டும்!

கொழும்பு மருத்துவ பீட வாணிவிழா..2016

வாணி விழாச் சேர்ந்து வாகான பூசைசெய்து
காணி நிலம் பாடக் காத்திருந்தோம்- பாணியென
இனிப்புச்சுவை தருவாய் இடர்களையும் கணபதியே
வணக்கம் முதல் வைத்தேன் வாழ்த்து!

சொல்லடுக்கு தொடரிடுக்கு எதுகைமோனையெனும் அடிக்
கல்லடுக்கி கவிகொடுத்த கலைமகனே- ச.வே
பஞ்சாட்சரத்தின் பாதத்திலை விழுந்தெழும்ப
எண்சாணுடம்பே எனக்கு!

(உயர்தரத்து)
மாவட்ட முதல் என்ற மமதையுடன் நான்வந்தால்
அகில இலங்கை முதலிங்கு அசராமல் நிற்கிறது
கற்றது கையளவாம் கல்லாததுலகளவாம்
பெற்றது நல்லறிவின்பெறுதி!

அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்தெல்லோ
எங்கள் நாட்டின் இடமென்று - சமூகக்
கல்வியிலே பாடமாக்கி கரைச்சவிட்ட கதையொன்றும்
பொய்யில்லை உண்மை, பொறும்!

காணியாலை எழுப்பிக் கலைச்சதனால் அகதியென்று
ஊர்முழுக்கத் திரிந்தலைந்து உருவான கூட்டமிது
காணி வேண்டுமெனும் கனவுகளால் நிதம் நிரம்பும்
வேணும் இரவுகளின் விடிவெளிச்சம் பகலாக!

கலப்பைகள்பிடித்தகை காணாமல் போய்விடவே
இயந்திர உழவெல்லாம் இடம்பிடித்து வந்தணைய
உலக்கை உரலெல்லாம் ஊர்காணாப் பொருளாக
கலக்கி அரைக்க மிசின் கண்டிருந்தோம் கண்டிருந்தோம்.

கலப்பை பிடியாதான் கட்டுடலில் தொப்பைவிழும்
உலக்கைபிடியாதான் உடலிங்கு உரலாகும்
தொற்றா நோய்களின் தோற்றுவாயே எம்முடம்பு
பற்றாதிருக்கவெனின் பாடுபடு பாடுபடு!

வியர்கின்ற வேலைசெய்யவீட்டோடு  நிலம் வேண்டும்
பெயர்க்கின்ற கொழுப்பால்லாம் பிறையாகித் தேயோணும்
இறுக்கமாய் உடல்வேண்டும் இளகியதாய் மனம் வேண்டும்
கருக்கொண்ட மேகமுன் கனமழையாய் அருள்வேண்டும்.

உறுதியில்லாக் காணிபோல உனக்கு
ஊரெல்லாம் சொந்தக்காரர்
வேலியில்லா விளைநிலத்தில்
விடுகாலி மேய்ச்சலிடும்!

கட்டிக் காப்பதற்கு காத்திருந்துகாத்திருந்து
விட்டுக் கொடுக்காமல் விடைபெற்ற நீ  வாழ்க!

சீதனமாய்நிலம்கேட்டால் சிரித்திடுவர் நானுழைத்து
ஆதனமாய் அதுகொடுப்பேன் ஆற்றலது கண்டிடுவீர்!

நின்ற மரந்தறித்தால் நெடுவெயில்தான் கொளுத்தும்
என்று அறிந்திருந்தும் எல்லாரும் தறித்ததனால்
வெட்டைமுழுதும்பார் வெறிச்சோடிக்கிடக்கிறது!
பட்டதை எண்ணாத பயிர்நட்டு மனமகிழ்வோம்.


©  வாயுபுத்திரன்.
2016