ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

பசியின் துடிப்புக்களைப் பார்

கம்பன் கழகம் நல்லூரில் 31.01.1999 அன்று சொல்லப்பட்ட கவிதை!

திறந்த ஒரு மனதுடனே செய்ய ஒரு கவியரங்கில்
இறங்கி நாம் நிற்பதுவே இப்புவியில் - கரங்குவித்து
இரந்தும்மைக் கேட்கின்றோம் எழில் முருகா நல்லூரா
விரைந்தெமைக்காப்பாய் விழைந்து

தலைநிமிரக் கவியெழுதத் தன்வழியில் பழக்கிவிட்ட
இளங்கிழவர் ச வே ப இதயத்திலே போற்றுகிறேன்

அரங்கத்தின் தலைவர்க்கும் அவசரத்தில் கவியெழுத
உறங்காது கண்விழித்த உடனிருக்கும் கவிஞர்க்கும்-எம்
திறங்காண காண கூடியுள்ள சிறுவர்க்கும் பெரியோர்க்கும்
உரங்கொண்டு சொல்லிடுவேன் உங்களுக்கு என் வணக்கம்

(தனி) ஒருவனுக்கு உணவிலையேல் உலகத்தை அழிப்பதென
குறுகுறுத்த பாரதியே குற்றங்களைப் பொறுத்தருள்வாய்

வெண்பா அடியெடுத்து வேதனையைச் சங்கரிக்க
இன்றிளையோர் வந்தோம் எழுந்து

பசியின் துடிப்புக்களைப் பார்!
(29.01.1999 அன்று எழுதப்பட்டது)

கண்ணோடு காண்பதெல்லாம் காதலுடன் வீரமென்று
முந்நாளில் பாடிவைத்த முச்சங்கப் பாவலர்போல்
இந்நாளில் மறக்காமல் எடுத்தெறிவம் என்று நிற்க
பெண்ணான தமிழ்மகளோ பேசாதே என்றுரைத்தாள்

நாட்டிலே நடப்பதெல்லாம் நல்லதில்லை என்றதனை
பாட்டிலே எழுதப்போய் படும்பாடு துன்பமாகி
ஆட்டிப் படைக்கையிலே அடிவாங்கும் நிலைக்குன்னை
மூட்டிக் கொடுப்பார்கள் முழுக்கவனம் எடுஎன்றாள்

சண்டை, துவக்கு, சத்தமுடன் ஊர்கலக்கும்
குண்டு கண்ணிவெடி ஷெல் கூவுவதை வீரமென்று
துண்டுக் கவிதையிலே தூக்கப்போய் சிக்கலிலே
கண்டபடி மாட்டிவைக்கக் களமிங்கு தந்தாரோ??

வேண்டாம் நாட்டுநிலை விளம்புவதில் பிரச்சனையாம்
தூண்டா மணியொளியில் துயரந்தான் ஒளிர்கிறதாம்
சும்மா சொல்லாதீர், சோதனையின் மத்தியிலே
நம்மைக் காப்பதற்கு நானிலத்தில் யாரிருக்கார்?

பசியே இவ்வுலகில் படைதொடுத்த பலப் போராம்
உருசியாய் அறுசுவையை உண்டவர்கள் மற்றவரின்
பசியைப் புரிந்தறிய பலமாக முயன்றாலே
கசியும் கல்நெஞ்சும் கடல்தந்த உப்போடு

நீண்ட வரிசையிலே நிவாரணம் பெறுவதற்கு
வேண்டிப்பல காலம் வேதனைகளுற்றவர்நாம்
தாண்டிக் குளத்தாலே தடையின்றி லொறியேதும்
ஊன்ற ஆவென்ற ஊழ்வினையைப் பெற்றவர்கள்

கொம்படி பூநரி போனபின் கொழும்பிருந்து
லங்காஸ்ரீ மாகோ நம்தேசம் வருமெனவே
நம்பிக் கடைவாசல் நாயெனவே நாமிருந்து
வெம்பியழுத கதை வேறுருவம் பெற்றதடா

கொல்லைத்துளசியொடு கொடுத்த புழு அரிசியையும்
மெல்ல விழுங்குகையில் வேதனைகள் ஏதுமில்லை
நல்ல விளைவுபெற நம்நிலத்தில் பயிரிடுக
என்னும் குரல் கொடுக்க எல்லவரும் இங்கிருந்தார்

கியூ நின்ற பொழுது கொழுவலில் வயிறெரிந்து
வாயுளையத்திட்டி வசைமாரி பொழிவிக்க
எங்கிருந்தோ வந்தவர்கள் இடைநுழைந்து பின் தள்ள
பொங்கிய எம் கோபக்கணை போரிடவும் செய்ததடா!

ஆ காற்கிலோக் கொய்யா கனமான பப்பாசி
கோப்பாய் ஏரியிலே குதிர் தள்ளும் நெற்பயிர்கள்
சொக்காய்த் துடைபோன்று புடைத்தெழுந்த மரவள்ளி
நாக்கில் நீர்துடைத்து நம்பசியைப் போக்கினவே

பனையிலே நீரெடுத்து பாகுடனே சீனிசெய்து
பனம்பழத்துப் பினாட்டோடு படையலிட வயிறிங்கு
கனதியாய் மாறியது கனவில்லை நிஜம் என்ற
நினைவெழவே இனிக்கிறது நிறைவெழுந்து கனக்கிறது

கூழ்தான் குடித்தாலும் கொடுத்துதவிப் பலருக்கும்
வாழ்வளித்த இன்பங்கள் வரலாறு சொல்கிறது - அன்று
ஆண்டவரின் தன்மையிலே அகதிகூட மனமகிழ்ந்து
பாழடைந்த வீட்டினிலும் பக்குவமாய் படத்தெழுந்தான்

இன்றோ
சம்பா அரிசியிலே சமைத்தெடுத்த புரியாணி
கொம்புக் கிடாயிறைச்சி கோழியுடன் சேர்த்தருந்தும்
வசதியாழ் வந்தாலும் வன்னியிலெம் சோதரர்கள்
புசிக்கப் பொருளின்றிப் பொருமுவதை நாமறந்தோம்!

இப்ப
கடையில்
பாலிருக்கும் பழம் இருக்கும் வாங்கப் பணம் இருக்காது
BAR இனிலே தலைவருக்கு வீட்டு நினைவிருக்காது
கூல் சோடா குடிப்பவர்க்க பசியிருக்காது- அருகில்
கூழ்குடிக்க இயலாதார் நினைவிருக்காது
கூழுக்கழும் குடலைப் பற்றிப் பூங்குழல் அறியாது!!!


வணக்கம்

2 கருத்துகள்:

ஆதிரை சொன்னது…

//இன்றோ
சம்பா அரிசியிலே சமைத்தெடுத்த புரியாணி
கொம்புக் கிடாயிறைச்சி கோழியுடன் சேர்த்தருந்தும்
வசதியாழ் வந்தாலும் வன்னியிலெம் சோதரர்கள்
புசிக்கப் பொருளின்றிப் பொருமுவதை நாமறந்தோம்!//

:(

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

சிறு வித்தியாசம்.
இப்போதெல்லாம் பாஸ்மதி அரிசியில் புரியாணி போடுகிறார்கள். ஆயினும் உண்ண வழியில்லாதோர் ஒரு லட்சம்.

தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழிப்பதாக பாரதி பறை சாற்றினான்.

நாம் யாரை நோவது?

எந்த உலகத்தை அழிப்பது?