செவ்வாய், 15 ஜூலை, 2008

வாணிவிழா 2004 16.10.2004



கற்ற சபை நடுவே கல்லாதான் கவிசொரிந்தால்
பெற்றவரது தலைமீது பெரும் பாரம் - உற்றவனே
வேழமுகக் கடவுள் வினைதீரும் வரந்தாராயுன்
தாளில் வீழ்வேன் தணிந்து!


தலைநிமிரக் டவியெழ்தத்  தன் வழியில் பழக்கிவிட்ட
இளங்கிழவர் ச.வே.ப இதயத்திலே போற்றுகின்றேன்

கூடிநிற்கும் அவையோரே, கும்பிட்டு அருள்வேண்டிப்
பாடும் இவனிற்குப் பதில் சொல்லச் செவிகொடுப்பீர்!


வாணிவிழாவுக்கும் எனக்கும் வரலாற்றுத் தொடர்பிருக்கு!

கானிவெலும் கூத்துமெனக் கலக்கிய ஒருசிலரால் -
நீவாணிவிழாவுக்கு வரக்கூடாதெனச் சொல்லி
நாணிய நிகழ்வுகளும் நடந்திருக்குப் பழங்கதையாய்!


சரஸ்வதியே உனக்கென்ன சபதமடி?-என்குரலின்
உரப்பினிலே நீயிருப்பாய் உயிர் கொடுப்பாய் என நினைக்க –எனை
நடுத்தெருவில் விட்டிட்டோ நடக்கின்றாய்- இப்பெடியை
தடுக்காமல் காத்திட நீ தவறியதேன் எனக் கேட்டேன்


பெண்களென்றால் இப்படித்தான் பேய்க்காட்டும் பேர்வழிகள்
என்றுதான் நினைத்தேன் நான் , இடம்கேட்டு நீ வந்தாய்
கண்களிலே ஒரு குறும்பு கன்னங்களில் குழிவிழவும்
என்மனதுக் கோட்டையுள்ளே எப்படித்தான் நீ புகுந்தாய்?

புத்தகம் எல்லாமே புதுசாக வைத்திருப்பேன்
இத்தனை நாள் என்ன செய்தாய்? இதைத் திறந்து எத்தனைநாள்??
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் தனிவிரலும் படவில்லை
பத்தினியாய் வைத்தெல்லோ பாதுகாத்தேன் புத்தகத்தை

தொட்டுப் பார்க்காமல் தூங்கிவரும் என் நோட்ஸ்
எல்லாம்கன்னி கழியாமல் காத்திருக்கும்- கடைசியிலே
என்னத்தை எழுதுவியாம் எனக்கேட்கும் எனைப்பார்த்து
புன்னகைப்பேன் நான் அதற்கு , புரிந்திருக்கும் உங்களுக்கு

(என்ர) பெடியன் டொக்ரர் எனப் புளுகும் அம்மாக்கு- என்
மனஅவியல் புரிந்திருக்க அவகாசம் கிடைக்காது
விடியல் வேளைமுதல் இரவு விழுந்து படுக்கும் வரை
கொடுமை வாழ்வெமக்கு கொடுத்தான் இறை நமக்கு!

இத்தனையும் இருந்தாலும் இதயத்திலே ஓரீரம் - மனந்திறந்து
கொட்டவொரு ஆசைவரும் குறுக்காலே மனந்தடுக்கும் (முந்திப்)
பட்டசூடு போதுமென்று படமோடும் ஆனாலும்
கெட்டவழியில்லை இதைக் கேட்பதற்கு அது விரும்பும்!

கலையின் அரசியை நான் காதலித்தேன் -அதற்காக
விலைகள் பல கொடுத்தேன் வீடுவிட்டு இங்கு வந்தேன் - அம்மாவின்
உலைச் சோற்றை , உறித்தயிரை என்பசுவின்
முலைச் சுரப்பை மற்ந்தெல்லோ முயல்கின்றேன் உனக்காக

வேப்பமரக்காற்றை வீசுமந்தத் தென்றலினைகோர்த்துப்
பூச் சொரியும் கொன்றையின் மர அடியை –முற்றத்தில்
கூத்தடிக்கும் பசுக்கன்றைக் கொஞ்சாமல் இங்கு வந்து
பார்த்த மிச்சம் என்ன பதில் நீதான் தரவேண்டும்!

என்வயலில் எல்லாமே மானாவாரிப் பயிர்ச் செய்கை
மழைவந்தால் நெல்விளையும் மற்றப்படி நீர் இறைத்து
பயிரை வளப்பதற்குப் பக்குவந்தான் வரவில்லை
கயிறு உன்கையில் காத்திடுவாய் என்தேவி!

ஏதோநான் உன்னருகில் இணைந்திருப்பேன் என நினைத்தால்
மோதத் திருவுளமோ, முத்தமிழினின் முழுவடிவே
ஆக , நான் பெற்ற அறிவெல்லாம் வீணாச்சா?
காதல் திருவுருவே கண்ணசைவு தந்திடடி!

காதல் வந்தாலும் சில்லறைக் காசோடு கொயின்ஸ்
பூத்தில்ஓதல் செய்வதற்கு (இரவு) ஒன்பது மணிவரைக்கும்
கூதல் குளிரின்றிக் குந்திநின்று வரிசை கட்டும்
பேதைப் பெடியனைப்போல் பெண்ணே நான் வரமாட்டேன்!

என்ன சாப்பிட்டீர் எப்படியிருக்கின்றீர்
முன்னர் ரீ குடிச்சு முடிச்சாச்சா –எனக்கேட்டுக்
கன்னம் உளையும் வரை கதைக்கின்ற திறமையெல்லாம்என்னிடத்தில் இல்லையடி ஏற்றிடுவேன் இக்குறையை!

எனக்காக நீயிருப்பாய் இதைத் தவிர
யாரோடும் கதைப்பாயேல் எந்தனுக்கு கண்டபடி கோபம்
வரும் உதைப்பேன் நான் ஊரரிந்த ஒருமுரடன்
இதைக்கண்ட பின்னாலும் இசைவாக இருப்பாயோ?

கையிலே புத்தகம் பாரம் கடக்க இருப்பது நெடுந் தூரம்
சட்டைப்பையிலே Human serum பார் விழியில் பெரும்
ஈரம் வைகறையில் துயிலெழவும் வருகிறது மன்ப்
பாரம் கைகொடுத்துத் தா வீரம், இதைத் தருவதற்கேன் பேரம்???!

துவண்டு விழுகையிலே தூக்கியெனை விட்டவள் நீ
தவழும் குழந்தையது தன் காலுன்றி மேலெழுந்து
அழகு நடைபயில அடி சொல்லித் தந்தவளை
தொழுதல் முறையன்றோ, தொடங்கிடுவேன் இப்போதே

இடையில் ஆயிரந்தான் இருந்தாலும் நானுந்தன்
தொடையில் வளர்ந்தவன்ரி தூயவளே அன்புசெய்து
தடைகள் என்பாதை தடுக்காமல் காப்பாற்று
முடிவில் நானுனக்கு முத்தாய்ப்பாய் நன்றி சொல்வேன்!

வணக்கம்!

கருத்துகள் இல்லை: